Saturday, June 26, 2010



கண்ணம்மா - என் காதலி


வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!....


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!

(தீர்த்தக் கரையினிலே...)

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ?

(தீர்த்தக் கரையினிலே...)

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

(தீர்த்தக் கரையினிலே...)

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி!

தீர்த்தக் கரையினிலே...

மகாகவி சுப்பிரமணிய பாரதி

No comments:

Post a Comment